“அவுட் ஆகப்போகும் 12 பேர்?”… காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு திமுக வைத்த செக்…. ரகசிய சர்வேயில் கசிந்த பகீர் தகவல்….!

By Nanthini on மாசி 8, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டு விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. அண்மையில் திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசிய போதிலும், கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் குறித்து திமுக தலைமை ரகசியமாக எடுத்த சர்வே ரிப்போர்ட், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நடத்திய இந்த ஆய்வில், தற்போதுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் சுமார் 12 பேரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் அந்தத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சர்வே முடிவுகள் எச்சரிக்கின்றன. இதனால், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளைக் குறைக்கவும், வெற்றி வாய்ப்புள்ள இடங்களை மட்டும் ஒதுக்கீடு செய்யவும் திமுக தலைமை கறார் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

   

தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை, ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகள் என்ற கணக்கில் மொத்தம் 27 தொகுதிகளை காங்கிரஸிற்கு வழங்க திமுக முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம், காங்கிரஸ் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையை திமுக முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. காங்கிரஸுடனான பேச்சுவார்த்தையின் போது, இந்த சர்வே அறிக்கையை ஆதாரமாக முன்வைத்து தங்களது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது.

   

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் சூழலில், இரு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைப்பதில் திமுக உறுதியாக இருந்தாலும், வெற்றி வாய்ப்பை மட்டுமே கருத்தில் கொண்டு காய் நகர்த்தி வருகிறது. வரும் நாட்களில் திமுக தரப்பில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்ட பிறகு, இந்தக் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.