காசியாபாத்தின் பாரத் சிட்டி குடியிருப்பில் வசித்து வந்த நிஷிகா (16), பிராச்சி (14) மற்றும் பாகி (12) ஆகிய மூன்று சகோதரிகள், கடந்த புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் தங்களது 9-வது மாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் கொரிய கலாச்சாரம் மற்றும் கே-பாப் (K-Pop) இசையில் அதீத ஆர்வம் கொண்டிருந்ததுடன், சமூக வலைதளங்களில் மரியா, அலிசா, சிண்டி போன்ற கொரியப் பெயர்களில் கணக்குகளைத் தொடங்கி பெருமளவிலான பின்தொடர்பாளர்களைப் (Followers) பெற்றிருந்தனர். இவர்களது இந்த வினோத மோகம் மற்றும் செல்போன் பயன்பாட்டைக் கண்டித்த தந்தை சேத்தன் குமார், 10 நாட்களுக்கு முன்பு அவர்களின் கணக்குகளை முடக்கி, செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளார்.
மேலும், பங்குச் சந்தையில் சுமார் ₹2 கோடி கடன் சுமையில் இருந்த தந்தை, மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்காகத் தனது மகள்களின் செல்போன்களை விற்றுள்ளார். வறுமை காரணமாகச் சிறுமிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிக்கும் அனுப்பப்படவில்லை. தற்கொலைக்கு முன்பு சிறுமிகள் எழுதிய 8 பக்கக் கடிதத்தில், “கொரியா தான் எங்கள் வாழ்க்கை; எங்களை ஒரு இந்தியருக்குத் திருமணம் செய்துவைக்க நீங்கள் மிரட்டியது மனவேதனையைத் தந்தது” எனக் குறிப்பிட்டுள்ளனர். “உங்களின் அடிகளுக்கும் சித்ரவதைகளுக்கும் மரணமே மேல்” என்று அவர்கள் உருக்கமாக எழுதியுள்ள கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு, தந்தை மீதான குற்றச்சாட்டுகள் குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
