தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக அரசுடன் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தொடங்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழியுடன் அவர் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி இம்முறை கடந்த முறையை விட கூடுதல் இடங்களைக் கோரி வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை 35 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொகுதிப் பங்கீடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவது கூட்டணியில் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தரப்பில் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஏற்கனவே ஐவர் குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், திமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைக்கத் தயாராகி வருவதாகவும், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் இந்தக் குழு அமைய வாய்ப்புள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக இருப்பதாகவும், அதனாலேயே புதிய கட்சிகள் காங்கிரஸுடன் இணைய விரும்புவதாகவும் கிரிஷ் சோடங்கர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கும் போது, தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் ஆட்சிப் பங்கு போன்ற விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கடந்த முறையை விட ஓரிரு தொகுதிகள் மட்டுமே கூடுதலாக வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், வரும் நாட்களில் அதிகாரப்பூர்வ குழுக்கள் சந்தித்துப் பேசும் போது மட்டுமே தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு தெரியவரும்.
