தேனி மாவட்ட அதிமுகவில் நிலவும் கோஷ்டி மோதல்களால் தொண்டர்கள் உற்சாகமின்றி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கைகோர்த்திருப்பது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆண்டிபட்டி தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்படலாம் என்ற பேச்சு பரவி வருவதால், கடந்த 9 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனை ஏற்க மனமில்லாமல் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள டிடிவி தினகரன், தனது மனைவியை இங்கு களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டியில் அதிமுகவை முந்தி இரண்டாம் இடத்தைப் பிடித்ததைச் சுட்டிக்காட்டி, இத்தொகுதி தங்களுக்குத்தான் என அமமுக அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், அமமுக வேட்பாளருக்கு சீட் கொடுத்தால் தேர்தல் பணிகளில் ஒத்துழைக்காமல் ‘உள்ளடி’ வேலைகளில் ஈடுபட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர். ஒருகாலத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்த ஆண்டிபட்டியில், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான இந்த ஈகோ மோதல் திமுகவிற்குச் சாதகமாக அமையுமோ என்ற அச்சம் மேலிடத் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
