தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், அண்மையில் வெளியான தேர்தல் கருத்துக்கணிப்புகளைக் கடுமையாகச் சாடினார். தற்போதைய கணிப்புகளில் சில “கடுப்பில் விட்ட கணிப்புகளாக” இருப்பதாகக் கிண்டலடித்த அவர், உண்மையான நிலவரம் களத்தில் வேறாக இருப்பதாகக் குறிப்பிட்டார். கருத்துக்கணிப்பு நடத்துபவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று பார்த்தால், அனைத்து வீடுகளிலும் தவெக-விற்கு இருக்கும் ஆதரவைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள் என்றும், அந்த அதிர்ச்சி தாங்க முடியாவிட்டால் முடிவுகளை ரப்பர் வைத்து அழித்துவிட்டு மீண்டும் கணிப்புகளை நடத்திப் பார்க்கட்டும் என்று ஆவேசமாகப் பேசினார்.
அதே நேரத்தில், நேர்மையான முறையில் எடுக்கப்படும் உண்மையான கணிப்புகளைத் தான் மதிப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், அந்த மாற்றத்தின் அடையாளமாகவே தவெக உருவெடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த போலி கணிப்புகளைத் தகர்த்து, மக்களின் பேராதரவுடன் தனது கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்பதில் தமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகத் தொண்டர்கள் மத்தியில் விஜய் உறுதிபடத் தெரிவித்தார்.
