“நேரத்தை வீணடிக்காதீங்க சார்”…. தவெக விஜய் பற்றிய கேள்வி.. சட்டென சூடான செந்தில் பாலாஜி…. கோவையில் பரபரப்பு….!

By Nanthini on மாசி 1, 2026

Spread the love

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுகவின் புதிய கட்சி அலுவலகத் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் வகையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை திமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் சற்றே அதிருப்தியடைந்த செந்தில் பாலாஜி, “சந்திக்கவே முடியாமல், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பவரைப் பற்றி எங்களிடம் கேள்வி கேட்டு ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?” என்று பதிலடி கொடுத்தார். விஜய்யின் பெயர் குறிப்பிடாமல் அவரை விமர்சிக்கும் வகையில் செந்தில் பாலாஜி பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணி மிகவும் வலிமையாக இருப்பதாகவும், 234 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையே வேட்பாளராகக் கருதி உடன்பிறப்புகள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். ஊடகங்கள் தங்களின் ‘ரேட்டிங்’கிற்காக ஒரு பக்கமாகவே கேள்வி எழுப்பாமல், சம்பந்தப்பட்டவர்களிடமும் இத்தகைய கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மக்கள் செல்வாக்கு திமுகவின் பக்கமே இருப்பதாகவும், 2026-லும் 2021 போன்றே மகத்தான வெற்றியை மக்கள் வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

   

தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, விஜய்யை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது போன்ற கருத்தைப் பதிவு செய்துள்ளது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சி மற்றும் புதிய அரசியல் வரவுகளுக்கு இடையேயான இத்தகைய மோதல் போக்கு வரும் நாட்களில் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.