2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் சரிபார்ப்பு பணிகள் (SIR) முடிக்கப்பட்டு, அண்மையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், பிழைகளைத் திருத்துதல் மற்றும் நீக்கம் செய்தல் போன்ற பணிகளுக்காக இன்றுவரை (ஜனவரி 30) அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பெயர்களைச் சரிபார்க்கவும், புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், வாக்காளர்களின் ஜனநாயக உரிமையை உறுதி செய்யும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்போது பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், விடுபட்ட தகுதியுள்ள நபர்கள் அனைவரும் இந்த கூடுதல் கால அவகாசத்தைப் பயன்படுத்தி தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
