“1+3” பிளான்… பிப்ரவரியில் விஜய்யின் மெகா ஸ்கெட்ச்… 234 தொகுதிகளையும் தட்டித்தூக்க ‘தவெக’வின் தேர்தல் வியூகம் தயார்…..!

By Nanthini on தை 28, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிரடியான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். இதுவரை விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் வெற்றிகரமாக மாநாடுகளை நடத்தியுள்ள தவெக, தேர்தலுக்கு முன்பாக மேலும் ஒரு பிரம்மாண்ட மாநாடு மற்றும் மூன்று மண்டல அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் பிப்ரவரி முதல் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளன. இதற்குப் போட்டியாக விஜய்யும் தனது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கூட்டணி குறித்த தெளிவான முடிவுகள் இன்னும் எட்டப்படாத நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் மனநிலையில் விஜய் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாகவே, மாநிலம் தழுவிய அளவில் முக்கிய மண்டலங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தனது பலத்தை நிரூபிக்க அவர் தயாராகி வருகிறார்.

   

திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாட்டின் வாயிலாகத் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை முறைப்படி வெளியிட விஜய் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மண்டல ரீதியாகப் பொதுக்கூட்டங்களை நடத்தும்போது அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவது எளிதாக இருக்கும் என்று விஜய் கருதுகிறார். அடுத்த மாநாட்டைத் தென் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய மாவட்டத்தில் நடத்த வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

தற்போதுள்ள அரசியல் சூழலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பும் விஜய்யை நோக்கி விமர்சனக் கணைகளை வீசத் தொடங்கியுள்ளன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களிடம் ஆழமாகப் பதிவு செய்யவும் இந்தப் பொதுக்கூட்டங்கள் விஜய்க்கு ஒரு முக்கிய மேடையாக அமையும். பிப்ரவரி மாதம் முதல் தவெகவின் தேர்தல் களம் இன்னும் பரபரப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.