உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் உள்ளிட்ட 45 ஆன்மீகத் தலங்களுக்குள் இந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்குத் தடை விதிக்க அம்மாநிலக் கோயில் கமிட்டி முடிவு செய்துள்ளது. தேவபூமியின் புனிதத்தையும், கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கமிட்டியின் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான ஹேமந்த் திரிவேதி அறிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழமையான சடங்குகள் கடந்த காலங்களில் மீறப்பட்டதாகவும், அதனைச் சரிசெய்து கோயில்களின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக அரசின் இந்தத் திட்டத்திற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இக்கோயில்களுக்கு பொதுவாகவே பிற மதத்தினர் வருவதில்லை என்றும், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இதுபோன்ற அறிவிப்புகளை அரசு வெளியிடுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. குளிர்காலத்திற்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் கோயில்கள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், வரவிருக்கும் கமிட்டி கூட்டத்தில் இது தொடர்பான முறையான மசோதாவை நிறைவேற்ற கோயில் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
