எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க… எனக்கு 2 பிள்ளைங்க இருக்காங்க.. மரண அவஸ்தையில் துடித்த தந்தை.. மருத்துவமனை அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்..!!

By Soundarya on தை 27, 2026

Spread the love

“எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்க, எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க” என்று மரணப் போராட்டத்திற்கு இடையே ஒரு தந்தை எழுப்பிய உருக்கமான குரல் வீணான சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாகடா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிகாலை 1.30 மணியளவில் மார்பு வலியுடன் வந்த 37 வயது பிஸ்மீர், அங்குள்ள மருத்துவப் பணியாளர்களின் கடும் அலட்சியத்தால் உயிரிழந்தார். மூச்சு விட முடியாமல் அவர் துடித்தபோதும், அவருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சையோ அல்லது ஆக்சிஜன் உதவியோ வழங்காமல், நாற்காலியில் உட்கார வைத்து ஊழியர்கள் கேள்வி கேட்பதிலேயே குறியாக இருந்த கொடூரம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

முறையான மருத்துவ உதவியோ அல்லது உடன் ஒரு செவிலியரோ இல்லாமல் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பப்பட்ட பிஸ்மீர், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உயிர் பிச்சை கேட்ட ஒரு தந்தையை, மருத்துவமனையின் அலட்சியம் பலிவாங்கியுள்ளது சமூக வலைதளங்களில் #JusticeForBismeer என்ற ஹேஷ்டேக் மூலம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பிஸ்மீரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.