தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொண்டர்களிடையே சமூக வலைதளப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தவெக தலைவர் விஜய் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து, அதிமுகவின் ஐடி விங் (IT Wing) சார்பில் அவருக்குத் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இது இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையிலான மோதலை இணையதளங்களில் தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தவெக தளங்களில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த மோதலில், தவெக தொண்டர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோர் பிரதமர் மோடியின் காலில் விழுவது போன்ற எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பரப்பினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அதிமுக தொண்டர்கள் ஒரு பழைய வீடியோவைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர். அதில், நடிகர் விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் தங்கள் திரைப்பட வெளியீட்டுப் பிரச்சனைகளுக்காக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசி பெறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ யுத்தம் 2026 தேர்தல் களத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலான நேரடிப் போட்டியை இப்போதே உறுதிப்படுத்தியுள்ளது.
