“செங்கோட்டையா, என்ன பொழப்பு இது?”… எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விட விஜய் பெரியவரா?… மேடையிலேயே வறுத்தெடுத்த அதிமுக மா.,செ….!

By Nanthini on தை 26, 2026

Spread the love

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் நேற்று இரவு நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில், அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அவர் மிகக் கடுமையாக விமர்சித்தார். “50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் விஜய் போன்ற ஒரு தலைவரைப் பார்த்ததில்லை” என்று செங்கோட்டையன் பேசியிருப்பதைச் சுட்டிக்காட்டிய செல்வராஜ், “அப்படியென்றால் நம்மை ஆளாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் ஜெயலலிதாவை விட விஜய் பெரிய தலைவரா? இவ்வளவு காலம் அதிமுகவில் இருந்துவிட்டு இப்போது இப்படிப் பேசுவது பிழைப்புக்காகச் செய்யும் அவமானம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கோபிசெட்டிபாளையம் எப்போதும் அதிமுகவின் கோட்டை என்றும், செங்கோட்டையனை நம்பி இருந்தவர்கள் யாரும் அவரோடு செல்லவில்லை, அனைவரும் எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவிலேயே உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். “விளையாட்டுப் போட்டிகளில் விசில் அடித்தால் ‘அவுட்’ என்று அர்த்தம், அதுபோல செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கையும் அவுட் ஆகிவிட்டது” என்று கிண்டலாகக் குறிப்பிட்ட செல்வராஜ், இனிமேலாவது நாவடக்கத்தோடு பேச வேண்டும் என எச்சரித்தார்.