தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுகவின் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று (ஜனவரி 26, 2026) மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுகவின் மகளிர் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மண்டலத்தைச் சேர்ந்த இலட்சக்கணக்கான பெண்கள் இதில் பங்கேற்க உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மேடையிலிருந்து தேர்தலுக்கான முக்கிய முழக்கங்களை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என ஏற்கனவே அதிரடி வாக்குறுதி அளித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, தற்போது வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’யை உயர்த்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் இந்த மாநாட்டில் வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே பெண்களைக் கவரும் வகையில் போட்டிப் போட்டுக்கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
