திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அகிலா என்ற பெண், இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்களின் திருமணத்திற்கு தியாகராஜனின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சமீபகாலமாகப் பண நெருக்கடியால் தியாகராஜன் தனது மனைவியைப் பிரிந்து மீண்டும் தனது தந்தையுடன் சென்று குடியேறியதாகக் கூறப்படுகிறது.
தன்னையும் தனது கைக்குழந்தையையும் தவிக்கவிட்டுச் சென்ற கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி, அகிலா ஜோலார்பேட்டை காவல் நிலையத்தின் முன்பாக திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கைக்குழந்தையுடன் இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் அகிலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்தக் குடும்பப் பிரச்சனை காரணமாக காவல் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
