“பார்த்தாலே கண் கலங்குது”…. 600 கிலோமீட்டர் மனைவியை ரிக்‌ஷாவில் தள்ளிய 70 வயது முதியவர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!

By Nanthini on தை 25, 2026

Spread the love

ஒடிசா மாநிலத்தில் வறுமையின் கோர முகத்தையும், ஒரு முதியவரின் நெகிழ்ச்சியான அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கந்தமால் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால், ஆம்புலன்ஸ் வசதியைப் பெற அவரிடம் போதிய பணம் இல்லாததால், வேறு வழியின்றி தனது மனைவியை ஒரு பழைய சைக்கிள் ரிக்‌ஷாவில் படுக்க வைத்து அழைத்துச் சென்றார்.

தன்னுடைய மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில், அந்த முதியவர் தனது கிராமத்திலிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்கு ரிக்‌ஷாவைத் தள்ளிக்கொண்டே சென்றுள்ளார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அதே ரிக்‌ஷாவில் மனைவியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். இவ்வாறாக மருத்துவமனைக்குச் சென்று திரும்பியதில் அவர் மொத்தம் 600 கிலோமீட்டர் தூரத்தை அந்தச் சிறிய ரிக்‌ஷாவிலேயே கடந்துள்ளார். “என்னிடம் பணம் இல்லை, என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான்” என்று அவர் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

   

இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. ஒருபுறம் மனைவியின் மீது அந்த முதியவர் காட்டிய அளப்பரிய அன்பு அனைவரையும் நெகிழச் செய்தாலும், மறுபுறம் அடிப்படை மருத்துவ வசதிகள் ஏழை எளிய மக்களைச் சென்றடையாத அவலநிலை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.