அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கு.ப. கிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். சென்னை மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தன்னைத் தவெக-வில் இணைத்துக் கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக வலம் வந்த இவர், தற்போது விஜய்யின் அரசியல் பயணத்தில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏற்கனவே அதிமுகவின் முக்கிய முகங்களாக இருந்த செங்கோட்டையன் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தவெக-வில் இணைந்து கட்சிப் பணியாற்றி வரும் நிலையில், தற்போது கு.ப. கிருஷ்ணனும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வருகை, தவெக-வின் அரசியல் பலத்தை அதிகரிப்பதோடு, அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மூலம் 2026 தேர்தலை எதிர்கொள்ள அக்கட்சி தயாராகி வருவதையும் வெளிப்படுத்துகிறது.
