சட்டை பை கிழிந்ததால் கொலை…! மது போதையில் நண்பனை தீர்த்துக்கட்டிய கும்பல்…! சென்னையில் பயங்கரம்…!!

By Devi Ramu on தை 24, 2026

Spread the love

சென்னை பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில், கடந்த நள்ளிரவு ரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெரும்பாக்கம் காவல்துறையினர், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான கார்த்திக் என்பதை உறுதி செய்தனர்.

பழைய குற்றவாளியான இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.

   

விசாரணையில், சம்பவத்தன்று கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஒருவரது இறுதிச் சடங்கில் மது அருந்திவிட்டு நடனமாடியது தெரியவந்தது. அப்போது போதை தலைக்கேறிய நிலையில், கார்த்திக் தனது நண்பரான குமாரிடம் மது வாங்கப் பணம் கேட்டுள்ளார். குமார் தர மறுத்ததால் அவரது சட்டைப் பையிலிருந்து வலுக்கட்டாயமாகப் பணத்தைப் பறிக்க முயன்றபோது சட்டை கிழிந்துள்ளது.

   

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், குமார் தனது நண்பர்களான விஜயகுமார், சரத்குமார் உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து பூங்காவில் மது அருந்திக் கொண்டிருந்த கார்த்திக்கைத் தாக்கியுள்ளார். இரு தரப்புக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் மதுபாட்டில்கள் மற்றும் கற்களால் கார்த்திக்கைச் சரமாரியாகத் தாக்கி, அவரது தலையில் கல்லைப் போட்டுப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியது அம்பலமானது. தலைமறைவாக இருந்த 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களைப் புழல் சிறையில் அடைத்தனர்.