பாஜகவின் மிரட்டலுக்கு பணியும் விஜய்…? ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் விஜய் மௌனம் காப்பது ஏன்…? கேள்விகளை அடுக்கிய திருமாவளவன்…!!

By Devi Ramu on தை 24, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாரதிய ஜனதா கட்சியையும் பிரதமர் மோடியையும் வெளிப்படையாக எதிர்க்கத் தயங்குவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாஜக அரசு தனது கூட்டணியில் இணையாத கட்சிகளை மிரட்டி வருவதாகவும், அந்த அச்சத்தின் காரணமாகவே விஜய் மௌனம் காப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குறிப்பாக, ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்குப் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருந்தால், அதை விஜய் துணிச்சலுடன் மக்களிடம் விளக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று விஜயைச் சுற்றி இருப்பவர்கள் ஒரு மாயையை உருவாக்கி வருவதாகத் தெரிவித்த திருமாவளவன், தற்போதைய அரசியல் யதார்த்தத்தை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். பாஜகவின் மிரட்டலுக்குப் பணிந்து அந்தக் கூட்டணியில் விஜய் இணைந்தால், அவருடைய அரசியல் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார். விஜய்க்கு ‘விசில்’ சின்னம் கிடைத்துள்ளதற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், வீண் அச்சத்தைக் கைவிட்டுத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதே விஜய்க்கு நல்லது என்று கூறினார்.