தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி எளிதாகப் பாஸ்போர்ட் பெறவும், வெளிநாடுகளுக்குச் செல்லவும் ஏதுவாக நடைமுறைகளைத் தளர்த்தி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கத் துறை ரீதியான தடையில்லா சான்று (NOC) பெறுவதில் இருந்த சிக்கலான நடைமுறைகள் தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து, டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சமர்ப்பித்து விரைவாக அனுமதியைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் இருந்த அரசுப் பணியாளர்களுக்கு, இந்த அறிவிப்பு கூடுதல் இனிப்பாக அமைந்துள்ளது.
புதிய விதிகளின்படி, பாஸ்போர்ட் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ விரும்பும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிக்குத் தகவல் கடிதம் அனுப்பிவிட்டு நேரடியாக விண்ணப்பிக்கலாம். எனினும், வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் முன்பு துறைத் தலைமையகத்திடம் முன் அனுமதி பெறுவது அவசியமாகும். அவசரத் தேவைகளுக்காகப் பாஸ்போர்ட் விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை அளித்து சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், வெளிநாடு செல்லும் ஊழியர்கள் அங்கு முறையான அனுமதியின்றி வேலை தேடக்கூடாது என்ற நிபந்தனையையும் அரசு விதித்துள்ளது.
