நாட்டின் தூய்மையான நகரமாகத் தொடர்ந்து புகழப்படும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், மீண்டும் அசுத்தமான குடிநீரால் மக்கள் பாதிக்கப்படும் அவலம் அரங்கேறியுள்ளது. மௌ பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், அதைப் பருகிய 22 பேருக்குத் தீவிர வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் உடல்நிலை மோசமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். ஏற்கனவே இதே போன்றதொரு சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் கசிவு மற்றும் கழிவுநீர் வெளியேறும் பாதைகள் முறையாகப் பராமரிக்கப்படாததே இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. முன்னதாக நடந்த விபத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை என்பது தற்போதைய பாதிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். தூய்மைக்கான விருதுகளைக் குவிக்கும் ஒரு நகரிலேயே சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவது நிர்வாகத்தின் அலட்சியத்தைப் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
