திமுகவுக்கும், போதைப்பொருள் மாஃபியாவுக்கும் தொடர்பு…. 14 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு… பிரதமர் மோடி பகீர் குற்றசாட்டு..!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

2026 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழகத்தின் பங்கு ஈடுஇணையற்றது எனக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு மூன்று மடங்கு கூடுதலாக, சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, தமிழகத்தின் பலமான விவசாயிகளும் மீனவர்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், தமிழக மக்களின் பேராதரவு இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே (NDA) இருப்பதை உணர முடிகிறது என்றும் அவர் பேசினார்.

அதே சமயம், ஆளும் திமுக அரசு போதைப்பொருள் மாபியாவுடன் கைகோர்த்துச் செயல்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டைப் பிரதமர் முன்வைத்தார். தமிழகத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்தப் போதைப்பொருள் கலாச்சாரத்திலிருந்து மாநிலத்தை மீட்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய அவர், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால் தமிழகத்தில் போதைப்பொருள் மாபியாக்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். தமிழகம் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாறவும், வேகமான வளர்ச்சியை எட்டவும் NDA-வின் வெற்றி அவசியம் என்பதே அவரது உரையின் முக்கியச் செய்தியாக அமைந்தது.