மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய ஆவேசமான உரையும், அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அவருடன் நகைச்சுவையாக உரையாடியதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மேடையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்ததுடன், “பை பை ஸ்டாலின்” (Bye Bye Stalin) என்று முழக்கமிட்டு அரங்கத்தையே அதிரவைத்தார்.
எடப்பாடி பழனிசாமி தனது உரையை முடித்துவிட்டு இருக்கைக்குத் திரும்பியபோது, பிரதமர் நரேந்திர மோடி அவருக்குக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தனது தொண்டையைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, “இவ்வளவு ஆவேசமாகப் பேசினால் தொண்டை என்னாவது?” என்பது போன்ற குறிப்பால் எடப்பாடியிடம் ஜாலியாகக் கேட்டார். பிரதமரின் இந்தச் செயலால் மேடையில் சிறிது நேரம் கலகலப்பான சூழல் நிலவியது.
இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டதுடன், பிரதமர் மோடியின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களது கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், திமுகவின் ஊழல் ஆட்சிக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது உரையில் சூளுரைத்தார்.
