மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி அதுல் நிஹாலேவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த செப்டம்பர் 24, 2024 அன்று ஷாஜகானாபாத் பகுதியில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில், தனது பாட்டி வீட்டின் முன்னே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை 15 நிமிடங்களில் அழைத்து வருவதாகக் கூறி கூட்டிச் சென்ற அதுல் நிஹாலே, அவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிறுமியின் அந்தரங்க உறுப்புகளை கத்தியால் துண்டித்து படுகொலை செய்துள்ளார்.
சிறுமியைக் காணவில்லை எனப் புகாரளிக்கப்பட்ட நிலையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் அதுல் நிஹாலேவின் வீட்டிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றத்தை வைத்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவரது தாயும் சகோதரியும் எலி செத்துவிட்டதாகக் கூறி போலீசாரைத் தடுக்க முயன்றனர். ஆனால், சந்தேகமடைந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் சிறுமியின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் சிறுமி மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. தற்போது இதனை எதிர்த்து அவர் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.
அதுல் நிஹாலே, அவரது தாயார் பசந்தி பாய் மற்றும் சகோதரி சஞ்சல் ஆகியோரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. விசாரணையின் போது, அந்தச் சிறுமியின் உடைகள் மற்றும் கொலையாவதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியவற்றை போலீசார் மீட்டனர். தான் செய்த குற்றத்தை அதுல் நிஹாலே ஒப்புக்கொண்டதோடு, சிறுமியின் சடலத்தை மறைப்பதற்கும் ஆதாரங்களை அழிப்பதற்கும் தனது தாயும் சகோதரியும் முழுமையாக உதவியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த போபால் விசாரணை நீதிமன்றம், குற்றத்தின் கொடூரத் தன்மையைக் கருத்தில் கொண்டு அதுல் நிஹாலேவுக்கு மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தது. மேலும், ஒரு கொடூரமான குற்றத்தை மறைக்கத் துணையாக இருந்ததற்காகவும், போலீசாரை திசைதிருப்ப முயன்றதற்காகவும் அவரது தாயார் மற்றும் சகோதரிக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
