“கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு”.. செவிலியர்கள் செய்த செயலால் 2 மாத கர்ப்பிணி பெண் பலி…. அதிர்ச்சி காரணம்….!

By Nanthini on தை 22, 2026

Spread the love

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் இல்லாத நேரத்தில் செவிலியர்கள் செல்போன் மூலம் ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்ததால், இரண்டு மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தோளி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி அபினா (வயது 21), கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு ஏற்பட்ட முதுகுவலி காரணமாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பணியில் மருத்துவர்கள் இல்லாததால், அங்கிருந்த செவிலியர்கள் மருத்துவருக்கு போன் செய்து கேட்டுவிட்டு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் அபினா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தாங்கள் நடந்து கூட்டி வந்த பெண்ணுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் உயிரிழக்கச் செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், ஏற்கனவே நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், திருமணமாகி சில மாதங்களிலேயே கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.