உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள மோதி நகர் பகுதியில், முட்டை குழம்பு சுவையாக இல்லை என்று கூறிய கணவனின் நாக்கை புது மனைவி கடித்துத் துப்பிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. விபின் மற்றும் இஷா தம்பதியினருக்குத் திருமணம் ஆகி ஆறே மாதங்களே ஆன நிலையில், சமையல் குறித்த ஒரு சாதாரண விமர்சனம் இவ்வளவு பெரிய வன்முறையாக மாறியது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று இரவு இஷா சமைத்த முட்டை குழம்பைச் சாப்பிட்ட விபின், அது ருசியாக இல்லை என்றும், ஒரு முட்டை குழம்பு கூட வைக்கத் தெரியாதா என்றும் தனது மனைவியைக் கடிந்து கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற இஷா, “ருசி பார்க்கும் இந்த நாக்குதானே உனக்கு இவ்வளவு திமிரைத் தருகிறது” எனக் கூறி, ஆக்ரோஷமாகத் தனது கணவனின் நாக்கை இழுத்துப் பிடித்து கடித்தார். இதில் விபினின் நாக்கின் ஒரு பகுதி துண்டாகி ரத்தம் கொட்டியதால், அவர் அலறியடித்தபடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முதலில் இந்தத் தாக்குதல் கத்தியால் நடத்தப்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் இஷா தனது பற்களாலேயே கடித்து நாக்கைத் துண்டித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விபினின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், இஷாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு சிறு சமையல் குறைபாடு, தம்பதியினரிடையே இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கு வழிவகுத்தது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
