அதிமுகவில் மேலும் 2 விக்கெட் அவுட்…. எம்.எல்.ஏ பதவியை தூக்கி எறியும் அதிமுக மாஜி…. காலை 10:30 மணிக்கு அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் மெகா ஜாயினிங்….!

By Nanthini on தை 21, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, ஓ. பன்னீர்செல்வத்தின் மிக நெருங்கிய ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்ற வைத்திலிங்கம், தற்போது அந்த அணியில் நிலவும் தேக்கநிலை மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்திற்கு ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்படாதது போன்ற காரணங்களால் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்காக வைத்திலிங்கம் தனது ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணையப் போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது வைத்திலிங்கம் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகிய முக்கியத் தலைவர்களின் வெளியேற்றம் ஓபிஎஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

   

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சராகவும், அதிமுகவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளையும் வகித்த வைத்திலிங்கத்தின் இந்த இடமாற்றம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுகவின் கரத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், அதிமுகவில் இவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், தங்களின் அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள இவர்கள் ஆளுங்கட்சியான திமுகவைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.