மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி கலையரசி, உடல் எடையைக் குறைப்பதற்காக இணையதளங்களை நாடியது பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த அவர், யூடியூப்பில் உடல் எடையைக் குறைப்பது குறித்த வீடியோக்களைப் பார்த்து, அதில் கூறப்பட்டிருந்த குறிப்புகளின் அடிப்படையில் ஒரு சில நாட்டு மருந்துப் பொருட்களைக் கடையில் வாங்கி வந்து உட்கொண்டுள்ளார்.
மருந்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மாணவிக்குக் கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில், அன்றிரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பகிரப்படும் மருத்துவக் குறிப்புகளை மருத்துவர் ஆலோசனையின்றிப் பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்தத் துயரச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இது போன்ற ஆபத்தான விளைவுகளைத் தவிர்க்க, முறையான மருத்துவப் பரிசோதனை இன்றி எந்தவொரு மருந்தையும் உட்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
