உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில், தனது தோழியுடனான ஓரினச்சேர்க்கை உறவுக்குத் தடையாக இருந்த கணவனை, மனைவியே கூலிப்படை வைத்து கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திகார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுமர் சிங் என்பவர் கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சுமர் சிங்கின் மனைவி ரேணு தேவி தனது தோழி மால்தி தேவியுடன் இணைந்து இக்கொலையைத் திட்டமிட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
ரேணு தேவிக்கும் ஏற்கனவே மூன்று திருமணங்கள் ஆகி பிரிந்து வாழும் மால்தி தேவிக்கும் இடையே முறையற்ற ஓரினச்சேர்க்கை உறவு இருந்து வந்துள்ளது. ஒருநாள் தனது மனைவி தோழியுடன் தனிமையில் இருந்ததை நேரில் பார்த்த சுமர் சிங், அதிர்ச்சியடைந்து இந்த உறவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், மால்தி தேவி வீட்டிற்கு வரக்கூடாது என்று தடை விதித்ததோடு, மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரேணு தேவி, தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஜித்தேந்திர குப்தா என்ற நபர் மூலம் ரூ. 60,000 பேசி கூலிப்படையை ஏவியுள்ளனர். கடந்த 14-ம் தேதி ஜித்தேந்திர குப்தா மற்றும் அவரது கூட்டாளிகள் சுமர் சிங்கை கழுத்தை நெரித்தும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் ரேணு தேவி, மால்தி தேவி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீசார் தேடி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
