“சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன்”… பெங்களூரு நடுரோட்டில் குடும்பத்தையே மிரட்டிய இளைஞர்…. பரபரப்பு வீடியோ….!

By Nanthini on தை 19, 2026

Spread the love

பெங்களூருவில் நடுரோட்டில் காரில் சென்ற ஒரு குடும்பத்தினரை இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டிய அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலையில் சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, காரின் அருகே வந்து ஆபாசமாகத் திட்டியுள்ளார். காரில் இருந்தவர்கள் ஏன் திட்டுகிறாய் என்று கேட்டபோது, ஆத்திரமடைந்த அவர் தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து, “சத்தம் போட்டால் கொன்று விடுவேன்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் முழுவதையும் காரில் பொருத்தப்பட்டிருந்த கேமரா (Dashcam) துல்லியமாகப் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட இளைஞரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் சையத் அர்பாஸ் கான் என்பதும், அவர் ஒரு மீன் கடையில் வேலை செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

   

இந்தச் சம்பவம் குறித்து பெங்களூரு காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் இடையூறு விளைவிக்கும் வகையிலான வன்முறைச் செயல்கள் மற்றும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டுதல் போன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள போலீசார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளனர்.