தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில காலமாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிச் செயல்பட்ட தனியரசு, தற்போது மீண்டும் அதிமுகவுடன் கைகோர்ப்பதற்கான சமிக்ஞையாக இது கருதப்படுகிறது
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனையின் போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பலத்தை அதிகரிப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, தமிழகத்தின் நலன் கருதி மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
