கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தேவனஹள்ளி அகலகோட் கிராமம் அருகே மாநில நெடுஞ்சாலையில், தவுசீப் என்ற வாலிபரும் அவரது இரண்டு நண்பர்களும் ஒரே பைக்கில் புடிகெரே சாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில், நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவனஹள்ளி போலீசார், விபத்தில் பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் சிக்கஜாலா பகுதியைச் சேர்ந்த தவுசீப் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர்களின் அலட்சியமே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
