திமுக அமைச்சரவையில் 3 சீட்?…. ராகுல் போட்ட ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் அறிவாலயம்….!

By Nanthini on தை 17, 2026

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளது. சமீபத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் உரையாடும்போது இது குறித்து சூசகமாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசிலும், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகிக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் அது சாத்தியமில்லை என்ற கேள்வியை அவர் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 2006-ல் திமுக சிறுபான்மை அரசாக இருந்தபோது காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததை நினைவு கூர்ந்துள்ள அவர், வரும் தேர்தலில் அமைச்சரவையில் இடத்தைப் பெறுவது குறித்து மாநிலத் தலைமை திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீலகிரிக்கு வந்திருந்த ராகுல் காந்தி காங்., கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் மீட்டிங் நடத்தியிருந்தார். இதில் நிர்வாகிகள் தரப்பில் ஆட்சியில் பங்கும், 3 அமைச்சர்கள் பதவியும், அதிக தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்ற் கோரிக்கைகள் வலுத்ததாம். இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவிக்கவில்லை என உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ராகுலும் அதே முடிவில்தான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியிடையே ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

   

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் “ஆட்சி அதிகாரம் என்பது மக்களின் விருப்பம்” எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், திமுக தரப்பில் தற்போது வரை அமைச்சரவையில் இடமளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. ராகுல் காந்தியின் இந்த மறைமுக அழுத்தம், வரும் 2026 தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுடன் சேர்த்து ஆட்சிப் பங்கீட்டையும் ஒரு முக்கிய நிபந்தனையாக காங்கிரஸ் முன்வைக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. இது தவிர, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையும் காங்கிரஸின் இந்த பேரம் பேசும் சக்தியை அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.