குஜராத் மாநிலத்தில் மகர சங்கராந்தி பண்டிகையின் போது பட்டம் விடும் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில், சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரத் மாவட்டத்தின் ஜஹாங்கீராபாத் பகுதியைச் சேர்ந்த ரஹனேஷ் என்ற அந்தச் சிறுவன், தனது நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக காற்றில் பறந்து வந்த கூர்மையான மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தை அறுத்ததில் அவன் பலத்த காயமடைந்தான்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகர சங்கராந்தி பண்டிகையின் ஒரு பகுதியாக குஜராத்தில் பட்டம் விடுவது வழக்கம் என்றாலும், தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல்களால் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்கதை ஆவது வேதனையளிப்பதாக உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
