இண்டிகோ விமான நிறுவனம் “Sale Into 2026” என்ற பெயரில் அதிரடியான மெகா சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் கீழ், உள்நாட்டுப் பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகள் வெறும் 1,499 ரூபாயிலிருந்தும், சர்வதேசப் பயணங்களுக்கான டிக்கெட்டுகள் 4,499 ரூபாயிலிருந்தும் தொடங்குகின்றன. குறிப்பாக, 24 மாதங்களுக்கு உட்பட்ட கைக்குழந்தைகளுக்கு உள்நாட்டு விமானப் பயணக் கட்டணமாக வெறும் 1 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தச் சலுகை விலை முன்பதிவு கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கி, வரும் ஜனவரி 16-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இச்சலுகையின் கீழ் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பயணிகள் ஜனவரி 20 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலப்பகுதியில் பயணம் செய்யலாம். குறைந்தபட்சம் பயணத் தேதிக்கு ஏழு நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்பது இதில் முக்கியமான நிபந்தனையாகும். இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி வழியாக மட்டுமே இந்த 1 ரூபாய் கைக்குழந்தை சலுகையைப் பெற முடியும்.
டிக்கெட் விலை தள்ளுபடி மட்டுமின்றி, கூடுதல் சேவைகளிலும் இண்டிகோ பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கூடுதல் சேவைகளுக்கு (Add-ons) 70% வரையிலும், கூடுதல் லக்கேஜ் கட்டணத்திற்கு 50% வரையிலும், விருப்பமான இருக்கைகளைத் தேர்வு செய்ய 15% வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குத் திட்டமிடுபவர்களுக்கும், குறைந்த செலவில் வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கும் இந்த மெகா சேல் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
