2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணி இறுதியாக்கப்பட்டு வரும் நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே பாமக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், பாஜகவின் வலியுறுத்தலை ஏற்று டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதன் மூலம் அமமுகவுக்கு சுமார் 10 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம், பாஜகவை பெரிதும் நம்பியிருந்த ஓ. பன்னீர்செல்வம் தற்போது அக்கூட்டணியில் இடமில்லாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்கவோ அல்லது கூட்டணியில் இணைக்கவோ வாய்ப்பே இல்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதால், ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. இதனால் அதிருப்தியில் உள்ள அவர், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் 2026 தேர்தலில் தமிழக அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
