தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த அறை நூற்றாண்டுகளாக திமுக மற்றும் அதிமுக என்ற போட்டி இருந்து வந்த நிலையில் தற்போது இரு கட்சிகளுக்கும் போட்டியாக நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். திரைப்பட நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கும் விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளது 2026 தேர்தல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கூட்டணிக்கு வருவார் என்று அதிமுக மற்றும் பாஜக எதிர்பார்த்த நிலையில் அரசியல் எதிரியை திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற நிலைப்பாட்டில் விஜய் தொடர்ந்து இருந்து வருகின்றார்.
இதனிடையே கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நேற்று விஜய் டெல்லி சென்று இருந்தார். அங்கு அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரவில் சந்திக்க இருந்ததாக தகவல் வெளியானது. இதனால் NDA கூட்டணியில் தமிழக வெற்றிக்கழகம் இணைவது உறுதியானதாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அப்படிப்பட்ட சந்திப்பு நடக்கவில்லை என்று தமிழக வெற்றி கழகம் தரப்பில் உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து அறைக்கு வந்த விஜய் உடனே சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது.
