அடுத்த வாரம் கவுகாத்தி – ஹவுரா வழித்தடத்தில் அறிமுகமாகவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில், பயணிகளுக்கான புதிய கட்டண முறைகள் மற்றும் முன்பதிவு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலில் குறைந்தபட்ச தூரமாக 400 கிலோமீட்டர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் அருகிலுள்ள ஊருக்குச் சென்றாலும் 400 கி.மீ தொலைவிற்கான கட்டணத்தையே செலுத்த வேண்டும். மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இயங்கவுள்ள இந்த அதிவேக ரயில், ராஜ்தானி எக்ஸ்பிரஸை விடவும் பயண நேரத்தை சுமார் 3 மணி நேரம் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதிவைப் பொறுத்தவரை, இந்த ரயிலில் ‘கன்பார்ம்’ டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்; ஆர்.ஏ.சி (RAC) அல்லது காத்திருப்போர் பட்டியல் (Waiting List) போன்ற நடைமுறைகள் இதில் கிடையாது. இருக்கைகள் இருக்கும் வரை மட்டுமே பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், கடைசி நேரப் பயணங்களுக்கு இது சவாலாக இருக்கலாம்.
இருப்பினும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக இட ஒதுக்கீடு வழக்கம் போலத் தொடரும். ராஜ்தானி ரயில்களை விட அதிக வேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்குப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
