மத்தியப் பிரதேச மாநிலம் ஜபால்பூரில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழகத்தில், மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீரைக் கொண்டு புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்குச் சாணம் மற்றும் கோமியம் வாங்கியதாகக் கணக்கு காட்டியுள்ளனர். மேலும், ஆய்வுப் பணிகளுக்காகப் பலமுறை விமானப் பயணம் மேற்கொண்டதாகவும் போலியான தகவல்களைத் தந்து பணத்தை மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
கடந்த 2011 முதல் 2018 வரை நடந்த இந்த ஆய்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், அரசின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, துணை ஆட்சியர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் மாட்டுச் சாணத்தின் பெயரால் நடந்த இந்த மெகா ஊழல் குறித்து அதிகாரிகள் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர்.
