தர்மபுரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கொழுந்தியாவையே காண்டிராக்டர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இண்டூர் ஒசஹள்ளி புதூரைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரபுவின் மனைவி ராஜேஸ்வரிக்கும், அவரது அக்கா கணவரான கட்டிட காண்டிராக்டர் அனுமந்தனுக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகாத உறவு இருந்து வந்துள்ளது. பிரபு பெங்களூருவில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று, தனது கணவர் பிரபு ஊருக்கு வர இருப்பதை அறிந்த ராஜேஸ்வரியிடம், அவர் வருவதற்கு முன்பே தனிமையில் சந்திக்க வேண்டும் என்று அனுமந்தன் அழைத்துள்ளார். இதற்காகப் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தச் சென்ற ராஜேஸ்வரி, பின்னர் அனுமந்தன் வரச்சொன்ன கல்லு கொல்லை மேடு என்ற இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து அனுமந்தன் உல்லாசத்திற்கு அழைத்தபோது, தங்களது பழக்கம் ஊருக்குத் தெரிந்துவிட்டதால் இனி சந்திக்க வேண்டாம் என்று ராஜேஸ்வரி மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தன், ராஜேஸ்வரியைக் கல்லால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர், ஆதாரங்களை மறைப்பதற்காக அங்கிருந்த ஒரு குழியில் ராஜேஸ்வரியின் உடலைத் தள்ளி கட்டிடக் கழிவுகளைக் கொண்டு மூடிவிட்டுத் தப்பியோடினார். இந்தச் சம்பவத்தை அவ்வழியாக ஆடு மேய்க்கச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தலைமறைவாக இருந்த அனுமந்தனை அதிரடியாகக் கைது செய்தனர். தகாத உறவு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்ததோடு, இரண்டு குடும்பங்களையும் சீரழித்துள்ள இந்தச் சம்பவம் தர்மபுரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
