கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ-வும், காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டவருமான ராகுல் மம்கூடத்தில், மூன்றாவது பாலியல் புகார் தொடர்பாக நேற்றிரவு நள்ளிரவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். பாலக்காட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த அவரை, நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் கேரள மாநிலக் குற்றப்பிரிவு சிறப்புப் புலனாய்வுக் குழு கஸ்டடியில் எடுத்தது. பின்னர் அவர் பத்தனம்திட்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு பெண், ராகுல் மம்கூடத்தில் மீது மின்னஞ்சல் மூலம் புதிய பாலியல் புகாரை அளித்தார்.
அதில், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கட்டாய கருக்கலைப்புக்கு உள்ளாக்கியதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். புகாரளித்த பெண் நேற்று ஆன்லைன் மூலம் SIT அதிகாரிகளிடம் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அதன் அடிப்படையிலேயே இந்த நள்ளிரவு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மீது இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் நீதிமன்றம் அவருக்குக் கைது நடவடிக்கையிலிருந்து இடைக்காலத் தடை மற்றும் முன்ஜாமீன் வழங்கியிருந்தது.
