“10 லட்சம் தாங்க, சீட் கன்ஃபார்ம்”… மருத்துவக் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பீட்டர் அறிவரசன்… சென்னையை உலுக்கிய ‘சூப்பர்’ மோசடி மன்னன்…!

By Nanthini on தை 10, 2026

Spread the love

சென்னையில் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த பீட்டர் அறிவரசன் என்பவரை நீலாங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலாங்கரையைச் சேர்ந்த உமா என்பவரின் மகளுக்கு, தனியார் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பில் இடம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடமிருந்து சுமார் 11.65 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு பீட்டர் ஏமாற்றியுள்ளார். நுழைவுத் தேர்வில் மாணவி தேர்ச்சி பெற்றும் சீட் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உமா அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பீட்டர் அறிவரசன் இதேபோன்று பலரிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. சென்னை தி.நகரில் நகைக்கடை வைத்திருக்கும் சந்தோஷ் ஜார்ஜ் என்பவரிடம் நகை வாங்கிவிட்டு போலி காசோலை கொடுத்து ஏமாற்றியது, டாக்டர் சரவணன் என்பவரிடம் வங்கியில் ஏலம் விடப்படும் நகைகளை மலிவாக வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தது என இவரது குற்றப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மேலும், நிதி நிறுவன முதலீடு மூலம் அதிக லாபம் தருவதாகக் கூறி ஒருவரிடம் 43 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

   

தற்போது பீட்டரை கைது செய்துள்ள நீலாங்கரை போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடி கும்பலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்றும், இன்னும் எத்தனை பேரை இவர் ஏமாற்றியுள்ளார் என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கல்வி மற்றும் முதலீடு தொடர்பான விஷயங்களில் பொது மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், முன்பின் தெரியாத நபர்களை நம்பி லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.