ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு ஆகியோர் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக அரசியலில் நுழைந்துள்ள விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் இதுதான். இந்தத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. எனவே தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியது.
படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் காட்சிகள் உள்ளதாகவும் அதனை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் என்றும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனால் இதுவரை படத்துக்கு சான்றிதழ் கிடைக்காததால் நாளை படத்தை ரிலீஸ் செய்வது முடியாத காரியம் என்பதால் படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஒருபுறம் சோகத்தில் இருக்க மறுப்பக்கம் நடிகர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அரசியல் பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரவி மோகன் ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து வருத்தம் தெரிவித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இதயம் கனக்கிறது விஜய் அண்ணா… உங்களுடைய கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக ஒரு சகோதரனாக நான் உங்கள் பக்கம் நிற்கின்றேன். உங்களுக்கு என்று ஒரு வெளியிட்ட தேதி தேவையில்லை. நீங்கள் திரையில் தோன்றுவது தான் உண்மையான ஓப்பனிங். அந்த தேதி எதுவாக இருந்தாலும் சரி அன்றைக்கு தான் எங்களுக்கு பொங்கல் ஆரம்பம் என்று ரவி மோகன் தெரிவித்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Heartbroken 💔 @actorvijay Anna.. as a brother I’m standing with you as one among the millions of brothers beside you. You don’t need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then. #istandwithvijayanna pic.twitter.com/ccFy6iK4qM
— Ravi Mohan (@iam_RaviMohan) January 8, 2026
