தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அதிமுகவிற்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த அதிமுக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. இதனால் தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக வெற்றி பெறுவதற்கான பல வியூகங்களை வகுத்து வருகின்றார். அதற்காக பல கட்சிகளிடமும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.
அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் நாமக்கல்லில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமானோர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஆலம்பாளையம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் எம் சுகுமார் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளன. தொடர்ந்து ஒரே நாளில் நடைபெற்ற இந்த இணைப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
