தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அரசியல் கட்சிகளும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் எத்தனை தொகுதிகளை கேட்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவை பொருத்தவரையில் தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என்ற முடிவில் காங்கிரஸ் உள்ளது. திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதி என காங்கிரஸ் குரல் எழுப்பி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸில் பலர் அதிகார பகிர்வு முழக்கத்தை முன்வைக்கின்றன. லயோலா கருத்துக்களை சுட்டிக்காட்டி தற்போது மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டுள்ள பதிவில், கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் அதிகார பகிர்வு பற்றி விவாதிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீண்டும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை வெடித்துள்ளதாக பேசப்படுகிறது
