பயங்கர அதிர்ச்சி..! மாரத்தானில் பதக்கம் வென்ற சில நிமிடங்களில் சோகம்.. 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு….!!

By Soundarya on தை 5, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டம் தலாசரி தாலுகாவிலுள்ள வெவ்ஜி கிராமத்தில், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 3, அன்று பாரதி அகாடமி ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற வருடாந்திர விளையாட்டு விழாவின் ஒரு பகுதியாக இந்த 5 கிமீ மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

அப்போது உம்பர்காவ் பகுதியைச் சேர்ந்த ரோஷினி கோஸ்வாமி (15) என்ற அந்த மாணவி, மாரத்தான் போட்டியில் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். பந்தயத்தை வெற்றிகரமாக முடித்த சில நிமிடங்களிலேயே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

   

முதற்கட்ட விசாரணையில், அதீத உடல் உழைப்பு காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தற்செயலான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரத்தான் போன்ற தீவிர விளையாட்டுப் போட்டிகளில் முறையான முதலுதவி மற்றும் மருத்துவ பரிசோதனைகள் இல்லாமல் மாணவர்களைப் பங்கேற்கச் செய்வது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்