தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இணைந்த பிறகு மாற்று கட்சியினர் பலரும் கட்சி தாவி வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை டார்கெட் செய்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருகின்றார்.
இந்நிலையில் முன்னாள் அதிமுக மாவட்ட கவுன்சிலர் தொண்டைமாநல்லூர் பன்னீர், தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் முன்னிலையில் தன்னை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைத்துக் கொண்டார். ஈரோடு கோபியில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக கொங்கு மண்டல நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
