ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்ட சிறையில் வார்டராகப் பணியாற்றி வந்த சுக்தேவ்சிங் என்பவர், உயர் அதிகாரிகளின் மனரீதியான துன்புறுத்தல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிறைக்காவலராகப் பணியாற்றி வந்த அவர், தற்கொலைக்கு முன்பாகத் தனது மகனுக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அதிகாரிகளின் தொல்லைகளைத் தாங்க முடியாமல் இந்த முடிவை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜனவரி 1 ஆம் தேதி மாலை விஷம் அருந்திய சுக்தேவ், சிகிச்சை பலனின்றி அன்று இரவு உயிரிழந்தார்.
சுக்தேவ் விட்டுச் சென்ற இரண்டு தற்கொலைக் குறிப்புகளில், சிறைத் துறைத் தலைவர் வருண் கோதாரா மற்றும் லைன் ஆபீசர் பூல் குமார் ஆகியோர் தன்னைத் தொடர்ந்து வதைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதய நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்ட நிலையிலும், அதிகாரிகள் காட்டிய கொடூரத்தால் தான் தோற்றுவிட்டதாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். சுக்தேவின் மகன் ஜஸ்பால் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
