தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பணிகளும் கூட்டணி வியூகங்கள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால் பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதற்காக கூட்டணி கட்சிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, மக்கள் மத்தியில் நல்ல திட்டங்களை செயல்படுத்துவது என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்து வருவது மட்டுமல்லாமல் திமுகவுக்கு எதிராக சில கருத்துக்களையும் கூறி வருகின்றது. அதன்படி திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அரசின் நிறைவேறாத வாக்குறுதிகளை பற்றி பொதுவெளியில் பேசி இருப்பது அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பென்னாகரம் மற்றும் அரூர் பகுதியில் மாநாடு நடைபெற்ற போது திமுக அரசு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் கூட்டணி கட்சியாகவே இருந்தாலும் எங்களுடைய கட்சி எப்போது மக்கள் நலன் சார்ந்தே செயல்படும் என தெரிவித்தது. திமுகவின் கூட்டணி கட்சியே இவ்வாறான செய்தியை கூறி இருப்பது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜய் கூட்டணியில் இணைவது போன்ற போக்கை காட்டி வரும் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த செயலும் திமுகவுக்கு எதிராக மாறி உள்ளது. இதனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவின் நிலைமை கேள்விக்குறியாகும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
