தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிலவும் உட்கட்சி பூசல்கள் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ‘எக்ஸ் தளத்தில் கடும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் சமயத்தில் மிகவும் அவசியமான வாக்குச்சாவடி முகவர் பட்டியலைக் கூட சமர்ப்பிக்க விடாமல் கட்சியின் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களை முடக்கும் சூழல் நிலவுவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் அடிப்படை கொள்கை நிலைப்பாடுகள் தற்போது நீர்த்துப்போயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியின் நேர்மையான அரசியலுக்கு முற்றிலும் முரணான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் மக்கள் பிரச்சினைகளை பற்றிப் பேசாமல் , வெறும் கூட்டல், கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், மாநிலத் தலைமைக்கு எதிராக அவர் முன்வைத்துள்ள இந்தப் புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
