தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதுடன் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2025 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணம் இடம்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக 248 கோடி ஒதுக்கியுள்ள அரசு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனிடையே ரொக்கம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5000 ரூபாய் வழங்க கோரி அதிமுக சார்பில் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
